அமுதம், கூட்டுறவுப் பல்பொருள் அங்காடிகளில் கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசி விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அவர் செய்தியாளர்களிம் கூறியதாவது:கர்நாடகா, ஆந்திர பிரதேசம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய பொன்னி உள்ளிட்ட சன்ன ரக அரிசிகளின் வரத்துக் குறைந்துள்ளதாலும், சில தனியார் வணிகர்களின் பதுக்கலினாலும் வெளிச்சந்தையில் அரிசி மற்றும் பருப்பு விலை உயர்ந்துள்ளது. இதனை உடனடியாகக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வெளிச்சந்தையில் நிலவும் விலை உயர்வைக் கட்டுப்படுத்த 1 லட்சம் மெட்ரிக் டன் சன்ன ரக அரிசியை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக 25,000 மெட்ரிக் டன் தமிழ்நாட்டில் விளையக்கூடிய சன்ன ரக அரிசி உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளது.
அவை, மாநிலம் முழுவதும் உள்ள 49 அமுதம் அங்காடிகள் மற்றும் 211 கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள் என மொத்தம் 250 மையங்கள் வாயிலாக விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது.
வெளிச்சந்தையில் கிலோ ரூ.70 முதல் ரூ.75 வரை விற்கப்படும் இந்த ரக அரிசியை, பொதுமக்கள் நேரடியாக 2, 3 மற்றும் 5 கிலோ பாக்கெட்டுகளாக கிலோ ரூ.30 என்ற சலுகை விலையில் பெற்றுக் கொள்ளலாம்.